புற்றுநோய்க் களமா தமிழகம்? Share On
SOCIOLOGICAL CATEGORY ARTICLE |

இயற்கை தவறாகப் பயன்படுத்தப்படும் போதெல்லாம் அது ஒரு பேராபத்தாக வெடிக்கிறது. நாம் கற்பனை செய்வது போல இயற்கைச் சீற்றங்கள் மட்டுமே இயற்கை வருவிக்கும் பேராபத்துக்கள் அன்று; மனித உடலைத் தாக்கும் மறைமுகமான விளைவுகளும் இயற்கையைப் பாதிக்கும் செயல்களால் ஏற்படத்தான் செய்கின்றன. பிப்ரவரி 4ஆம் நாளன்று உலக புற்றுநோய் தினத்தை நாம் கொண்டாடவிருக்கிறோம். புற்றுநோய் பெரும்பாலும் போதைப் பழக்கங்களாலும், தவறான உணவு முறைகளாலும் மனிதர்களை வருத்துகின்றன என்பது நாம் அறிந்ததே. என்றாலும் அவை மட்டுமே புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் அல்ல.

இயற்கையில் உள்ள சமநிலையைக் குலைக்கும் மனிதர்களின் பேராசைகள் கூட புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு முழுமுதற் காரணம் என்பதை நாம் அறிவோமா? இயற்கைச் சீரழிவிற்கும் புற்றுநோய்க்கும் பெரிய தொடர்பு ஒன்று உண்டு என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும் கூட அதுவே உண்மை.

நமக்கு சற்றே அருகிலுள்ள தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் பாதிப்புக்களை நாம் அறிந்திருக்கிறோம். தினந்தோறும் சுவாசக் கோளாறுகளாலும், புற்றுநோய் அறிகுறிகளோடும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்களும், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினர்களும் அணுமின் நிலையத்திலிருந்து வெளிப்படும் நேரடிக் கதிர்வீச்சுக்களுக்கு ஆளாகின்றனர் எனவும், அவ்வாறு பாதிக்கப்படும் அனைவருக்கும் எலும்பு மஜ்ஜைகளைத் தாக்கும் புற்றுநோய் உருவாகிறது என்றும் முதன் முறையாக 2012இல் அணுமின்நிலைய அதிகாரிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

கல்பாக்கத்தைச் சுற்றிலுமுள்ள 22 கிராமங்களைச் சேர்ந்த அப்பாவி கிராம மக்கள் ஏழுமுறை அதிக வீரியம் கொண்ட கதிர்வீச்சுக்கு ஆளாகி புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதற்கும் மேலாக, இன்றும் கல்பாக்கம் பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை மக்கள் உண்பதில்லை. இந்த உண்மைகள் நமக்குத் தெரியுமா?

இரண்டு மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலில் பாதரசக் கழிவுகளால் பாதிக்கப்பட்டு புற்றுநோய் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களைப் பற்றி நாம் விரிவான கட்டுரைகள் வழியாக அறிந்து கொண்டோம். நாம் வாழும் தமிழகத்தில் நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளில் புற்றுநோய்க் கதிர்வீச்சுக்களின் அபாயத்தில்தான் ஒவ்வொரு தமிழரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

'நான் சாப்பிடும் உணவைக் கைகளில் ஏந்தி அதன் நன்மைத்தனத்திற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல விழைகிறேன். அதே வேளையில் அதனுள் அடங்கியிருக்கும் ஆபத்தான கதிர்வீச்சுக்களிலிருந்து என்னைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்கிறேன். உணவுக்கு முன் சொல்லப்படுகிற நல்ல செபம் இதுவாகவே இருக்க முடியும் என நான் நினைக்கிறேன். இன்றைய சூழலில் இது பொருத்தமற்றது என்று என்னால் நினைக்க முடியவில்லை. புகுஷிமா அணுஉலை விபத்திற்குப் பிறகு கதிர்வீச்சு அபாயங்களே வாழ்க்கைச் சூழலாகிப் போய்விட்ட ஒருவரது வாழ்வில், தான் சாப்பிடும் ஒரு வேளை உணவில் கூட கதிர்வீச்சின் அபாயம் இருப்பது கண்டு அந்த உணவை மனநிறைவோடு உண்ண முடியாது போய்விட்ட பரிதாபம் அவரது வார்த்தைகளில் வெளிப்படுகிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

1. (I like to hold the food in my hands and thank for its goodness. Then I ask that it protect me from any harmful contaminations it holds. I think this is a sort of modern prayer before meals and not irrelevant under the circumstances” – letter written by Dr. Rosalie Bertell after the Fukushima  disaster). S. Anitha, NO: Echoes Koodankulam , 2012, 13. 

இந்தியா இப்போது அணுஉலை மோகத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே தான் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் அகிம்சை வழியில் அதை நிறுவுவதற்கு எதிராகப் போராடியும் அந்தப் போராட்டத்தின் வீரியத்தை தணித்து, அதைக் கொச்சைப்படுத்தி இன்று மக்கள் எதற்குஎதிராகப் போராடினரோ அதையே முனைந்து செயல்படுத்தியுள்ளது. இந்தியாவின் அணுஉலைக் கனவு மின்சாரத்திற்காக அல்ல; அணுகுண்டு தயாரிப்பதற்காகவே என்பதை நாம் அறியத் தவறியிருக்கிறோம். ஆனால் உண்மையில் அணுஉலைகளின் பாதிப்பு என்ன என்பதையும், அவை எந்த அளவிற்கு மனித இனத்தை கதிர்வீச்சு அபாயத்தினால் தாக்கி அழிக்கின்றன என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

பொதுவாக அணுஉலைகள் அவைகள் எந்த வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும் எல்லா நிலைகளிலும் வௌ;வேறு அளவுகளில் கதிர்வீச்சை ஏற்படுத்தக்கூடியவைகள் தான். சாதாரண உற்பத்திக் காலங்களில் இயல்பாக அணுஉலை செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதும் அணுஉலையிலிருந்து தொடர்ச்சியாகக் கதிர்வீச்சுக்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அணுஉலை இயங்கும்போது அதிலிருந்து வெப்ப ஆற்றல் வெளிப்படுவதோடு கதிர் இயக்கத் தனிமங்களும், கதிரியக்க ஐசோடோப்புகளும் வெளிப்படுகின்றன. இவை ஏராளமான கதிர்வீச்சைப் பரப்புவதால் இயல்பாக உடல் தாங்கக்கூடிய கதிர்வீச்சு அளவைவிட ஒரு லட்சம் கோடி மடங்கு கதிர்வீச்சு இவற்றின்மூலம் வெளிப்படுகிறது.

இக்கதிர்வீச்சு உடலைத்தாக்கினால் எலும்புப் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் வரும். கருச்சிதைவு ஏற்படும். தலைமுறை தலைமுறையாக உடல் ஊனத்தோடு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கதிர்வீச்சில் பாதிக்கப்பட்ட காற்றைச் சுவாசிக்கும் எல்லா உயிரிகளும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும். அணுஉலை அமைந்திருக்கும் பகுதியில் மட்டுமின்றி, குறைந்தது 170 கி.மீ. சுற்றளவில் உள்ள புல்லிலிருந்து நெல்லிலிருந்து அனைத்து வகை தாவரங்களிலும் இந்த அணுக்கதிர்வீச்சு படிந்துவிடும். புல்லைத் தின்கிற மாடும், தாவரங்களை மேய்கிற ஆடும் அவற்றைப் பயன்படுத்துகிற மனிதர்களும் தொடர்ச்சியாகப் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்தக் கதிரியக்கத்தின் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.

அமெரிக்க அணுசக்தி ஒழுங்கமைவுக் குழுமத்தின் (U.S. Nuclear Regulatory Commission) கூற்றுப்படி அணுஉலையில் ஒரு விபத்து ஏற்பட்டால் 3000 பேர் விபத்து நடந்த சில நாட்களுக்குள் கதிர்வீச்சினால் இறந்துவிடுகின்றனர். 45,000பேர் புற்றுநோயினால் இறந்து விடுகின்றனர். 45,000 பேர் கதிர்வீச்சு சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுவர். 2,40,000/- பேர் கழுத்துக்கழலை (Thyroid) நோயினால் அவதியுறுவர். 5000 குழந்தைகள் உடல் ஊனங்களோடு பிறப்பார்கள் என்று கணித்திருக்கிறது. ஆனால் இது மக்கள்தொகை மிகக் குறைவாக உள்ள பகுதிகளுக்கே பொருந்தும். இந்தியா போன்ற மக்கள்தொகை மிக்க நெருக்கடியான இடங்களில் (கூடங்குளத்தில்) இதன் பாதிப்பு 5 மடங்காக உயரும் என்கிறது அந்த ஆய்வு.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூடங்குளம் அணுஉலைப் பகுதியில் கடலோரத்தில் கூட்டம் கூட்டமாக செத்துப் போன திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது நம் அனைவருக்கும் தெரியும். கடலின் ஆழத்தில் உள்ள எரிமலை வெடிப்பில் அவை இறந்து போனதாக 'விஞ்ஞானிகள்' நிரூபணம் செய்ய முயற்சித்தாலும் அவை அணுஉலையிலிருந்து வெளிவந்த அணுக்கழிவுகளின் வெப்பமும், கதிர்வீச்சும் தாங்க இயலாமல் இறந்து போயின என்பதையும் நம்மால் யூகிக்காமல் இருக்க முடியவில்லை.


கி. வெங்கட்ராமன்,
கூடங்குளம் அணுஉலை கூடவே கூடாது
(சென்னை: தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி, 2011), 8-9.
A.N. Nagaraj and Shankar Sharma,
Nuclear Power Plants for India
(Karnataka: Environmental Study Centre, 2011), 16.

எது எப்படியோ ஆபத்தைக் கக்கத்தில் வைத்துக்கொண்டே உலக புற்றுநோயாளர் தினத்தை நாம் கொண்டாடப் போகிறோம். தமிழகத்தின் வடக்கிலும், மத்தியிலும், தெற்கிலும் என அனைத்துப் பக்கங்களிலும் புற்றுநோயை அல்லது புற்றுநோய் உருவாக்கும் உயிர்க்கொல்லி ஆலைகளை வைத்துக் கொண்டு, புற்றுநோய்க் களமான தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு உலகப் புற்றுநோயாளர் தினத்தை எந்த மனநிலையில் நாம் எதிர்கொள்ளப் போகிறோம்? மனித உயிர்களைக் காவு வாங்கும், புற்றுநோயைப் பரப்பும் கதிர்வீச்சுக்களை வெளியிடும் ஆலைகளை இனம் கண்டு, அவை பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கம் செய்வதே உலக புற்றுநோயாளர் தினத்தன்று நமக்குத் தேவைப்படும் மனநிலை.

அருட்பணி. தினகரன்

இணையாசிரியர்

COMMENTS

Share On

More Articles

இன / மத அழிப்பு முயற்சியில் பலிகடா ஆக்கப்பட்டது ..

ஆசிஃபா எனும் பெயர் கொண்ட 8 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள கதி கொடுமையானது; அதன் பின்னணியிலான அரசியல் அதைவிடக் கொடுமையானது. இதனை விளக்கக் கோரி பொது மக்களிடம் நியாயம் வேண்டுவதுதான் இந்த துண்டுப் பிரசுரத்தின் நோக்கம்.

நிகழ்வு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவ…

இயற்கையோடு இயல்பாக வ..

காப்பீட்டு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் ஒரு தம்பதியிடம் தன் நிறுவனத்தின…

கல்வி எனும் ஒரு சக்த..

இம்மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகளின் சிறப்புக் காலம். மாணவ மாணவியர் எந்தப் பள்ளி, எ…

Non-Violence: A Styl..

Non-Violence: A Style of  Politics for Peace. This is  the title of the …

New Published Books