அருள்பணியாளர் லூயி லெவேயை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியது இல்லை. நம்மில் பலர் லூயிஸ், லெவே என்னும் பெயர்களைத் தாங்கியிருப்பதே மக்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டுகின்றது.
அருள்பணியாளர் லூயி லெவே அவர்களிடம் விளங்கிய ஆழமான இறை நம்பிக்கை, வல்லமையுள்ள செப வாழ்வு, எடுத்துக்காட்டாய்த் திகழும் புண்ணிய வாழ்வு, நற்செய்தி அறிவிப்புப் பணியில் அவர் காட்டிய பேரார்வம், சாதி, மதம் கடந்து ஏழை, எளியவர் எல்லோருடைய ஏற்றத்திற்காகவும் அவர் செய்த சேவைகள் ஆகியவற்றால் தனிச் சிறப்புமிகுந்தவராக மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றிருக்கின்றார். அவர் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளைத் தன்னெழுச்சியாக மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து வருகிறார்கள்.
பிரான்ஸ் நாட்டில் பிறந்தவராயினும் இயேசு சபையில் சேர்ந்து 24 வயதிலேயே இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தார். தமது 53 ஆண்டுக் காலக் குருத்துவப் பணி முழுவதையும் நமது செம்மண் பூமியிலேயேää குறிப்பாக ஆண்டாவூரணி, இராமநாதபுரம், சருகணி ஆகிய பங்குகளில் சிறப்பாகச் செய்து மக்களின் செல்வாக்கைப் பெற்ற செம்மல்!
மக்கள்மீது அவர் கொண்டிருந்த அன்பால் அவர் இறுதியாகப் பணியாற்றிய சருகணியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். இறப்புக்குப் பிறகும் எண்ணற்றவர்களை இறைவன்பால் ஈர்க்கின்ற சிறந்த சாட்சியாகத் திகழ்கின்றார். ஆண்டு முழுவதும் பல்வேறு மதத்தவரும் அவருடைய கல்லறையைச் சந்தித்து மரியாதை செலுத்துவதையும், இறைவேண்டல் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் அவர் விண்ணகப் பிறப்பு அடைந்த மார்ச் 21-ஆம் நாளில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடி அவருக்கு அஞ்சலி செலுத்துவதும், உறவு விருந்தில் பங்கேற்பதும் மக்களின் மனம் கவர்ந்த மறைப்பணியாளராக அவர் விளங்கியதையே காட்டுகின்றது.
அருள்பணி. லூயி லெவே தமது அருள்வாழ்வினால் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பதால் திருச்சபை அவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தி அறிவிக்க ஆவண செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் முன்வைக்கப்படுகிறது. மக்கள் தாங்களாகவே வழிபாடுகளின்போது மன்றாடுவதும், இதைத் திருப்பலி கருத்துகளில் அடிக்கடி குறிப்பிடுவதும், அவர்களின் விருப்பத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகின்றன. சருகணிப் பங்கில் அடுத்தடுத்து வரும் பங்குப் பணியாளர்களும் மக்களின் எதிர்பார்ப்புகளை முன்வைத்துள்ளனர்.
நீண்ட காலமாகப் பல்வேறு தரப்பு மக்களிடமிருந்தும் அருள்பணியாளர்கள், இரு பால் துறவியரிடமிருந்தும் எழும் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. சிவகங்கை மறைமாவட்டக் குருக்கள் மன்றம் மற்றும் ஆலோசனைக் குழாமிலும் இது தொடர்பாகக் கலந்துரையாடல் நடைபெற்றது. அவற்றின் அடிப்படையில் அருள்பணி. சூ. ஜேம்ஸ் அந்துவான்தாஸ் இதற்கான வேண்டுகையாளராக (OStulator நியமிக்கப்பட்டுள்ளார். திருஅவைத் தலைமைப் பீடம் வகுத்தளித்துள்ள நடைமுறைகளின்படி அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார். அருள்பணியாளர்களும் துறவியரும் இறைமக்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய அருள்துணையோடு இதை நாம் செய்து முடிக்கத் தொடர்ந்து இறைவனை நோக்கி மன்றாடுவோம்.
செ. சூசைமாணிக்கம்
சிவகங்கை ஆயர்.




Spiritual Category
Religious Category
COMMENTS