அர்ப்பணவாழ்வு! இன்னும் முடியவில்லையா? Share On
SPIRITUAL CATEGORY ARTICLE |

அர்ப்பணவாழ்வு! இன்னும் முடியவில்லையா?

"இரக்கத்தின் கதவுகளை வெவ்வேறு கோவில்களில் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்களே…அப்ப, அர்ப்பண வாழ்வு முடிந்து விட்டதா?" என்று ஒருவர் என்னிடம் கொஞ்சம் நக்கலாக இந்த வருடத் தொடக்கத்தில் கேட்டார். உடனே முன்னொரு முறை நான்கேட்ட ஓர் உரையாடல் ஞாபகத்திற்கு வந்தது:
"உங்களுக்கு எப்ப திருமணம் முடிந்தது?" என்று ஒருவர் தன் நண்பரிடம் திருமணம் நடந்த வருடத்தைக் கேட்டார். அதற்கு அந்த நண்பர் சொன்னது என்ன தெரியுமா? "எங்கங்க முடிந்தது?! அதே மனைவியோடதான் இன்னும் இருக்கிறேன்!" என்று தெரித்தது பதில்.

திருஅவையில் அர்ப்பண வாழ்வுக்கென்று ஒதுக்கப்பட்ட ஆண்டு இன்னும் முடியவில்லை! ஏனெனில், 2014-ம் ஆண்டு நவம்பர் 30-ந் தேதி தொடங்கி இந்த வருடம் (2016) பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வரை தொடர்கிறது. அது முடிவதற்குள்ளாகவே, இறை இரக்கத்தின் யூபிலி ஆண்டு 2015-ம் வருடம் டிசம்பர் மாதம் 8-ந் தேதியே தொடங்கி விட்டது.


அர்ப்பண வாழ்வைப் பற்றிச் சிந்திப்பதற்கு ஓர் ஆண்டு போதாது. அதற்கு ஓரு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஏனெனில்,அர்ப்பண ஆண்டு நமது அர்ப்பணத்தை ஆழப்படுத்தவும் மேம்படுத்தவும், அர்ப்பணத்தின் முக்கியத்துவத்தை நம் உள்ளங்களில் தூசு தட்டி மிளிர வைக்கவும் நமக்காக ஏற்படுத்தப்பட்ட ஆண்டு. நமது அர்ப்பணம் ஒரு தொடர்கதை. அது வாழ்வாகவே மாற வேண்டும்.


நான் நவதுறவு மடத்தில் பயிற்சி பெற்ற போது, ஒருமாதத் தியானம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு மாதம் முழுவதும் அமைதியாக இருக்க வேண்டுமா?! என்று பயந்து கொண்டே ஆரம்பித்தோம். இதற்குப் பெயர் – நீண்ட தியானம். எப்படியோ ஒரு மாதம் ஓடிவிட்டது. முடிந்து விட்டதே என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த இறுதி நாளன்று, தியானம் கொடுத்தவர்”இனி தான் தியானமே தொடங்குகிறது!”என்று சொன்னதைக் கேட்டு நாங்களெல்லாம் ஆடிப் போய் விட்டோம். “யேசு சபையில் வாழ்க்கையைத் தேர்ந்து கொண்ட நீங்கள் அர்ப்பண வாழ்வை வாழ்ந்து காட்டுவது தான் உண்மையான தியானம்”; என்று அவர் விளக்கம் சொன்னார்.


நன்றாக நீந்தத் தெரிந்தவர்களுக்குக் கூட, பசிபிக் கடலை நீந்தியே கடக்க வேண்டும் என்று சொன்னால் என்ன உணர்வு தோன்றுமோ, அதே உணர்வு தான், அர்ப்பண வாழ்வை ஓரிரண்டு ஆண்டுகள் அல்ல, இறக்கும் வரை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று சொல்லும் போதும் எழுகிறது. நாம் வைத்திருப்பதில் கொஞ்சம் கொடுப்பது எளிது. ஆனால், நமக்கு இருக்கும் ஒரே வாழ்வையும் முழுமையாக யேசுவுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்றால் பயமுறுத்துகிறதே! “உம்மைப் பின்பற்ற நான் என்ன செய்ய வேண்டும்”; என்று பணக்கார இளைஞன் ஒருவன் கேட்டபோது யேசு சொன்ன பதில் இன்றும் நம்மை மிரட்டுகிறது.அதனால் தான், தான் வைத்திருந்ததை எல்லாம் கோவில் உண்டியலில் காணிக்கையாகப் போட்ட, யேசுவால் போற்றப்பட்ட கைம்பெண்ணைப் போன்ற மக்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது.அர்ப்பண வாழ்வு எப்படி ஓர் அர்த்தமுள்ள, மகிழ்ச்சியான வாழ்வாக நம் அனைவருக்கும் மாற முடியும்?


துறவற சபைகளில் சேர்ந்து, வார்த்தைப்பாடுகளை எடுத்து விட்டால் அர்ப்பண வாழ்வு தானாக உதித்து விடுமா? ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்று சோகத்தில் ஆழ்ந்திருப்பவர்கள் அர்ப்பண வாழ்வை நிறைவாக வாழ்கிறார்களா?வாழ்க்கைப் பாதையில் பாரமான சிலுவையைச் சுமந்து கொண்டு,கண்ணீர் கணவாயில் நடப்பவர்களைப் போல நகர்ந்து கொண்டிருக்கிறார்களே!மறைசாட்சியரைப் போன்று வாழ்வதாக நினைத்துக் கொண்டு போகுமிடமெல்லாம் துயர விதைகளைத்தூவிக் கொண்டு செல்கிறார்களே!துறவுக்காகத்தியாகம் செய்திருந்தாலும், இந்த இழப்பை, பதவியிலும், அதிகாரத்திலும் ஈடுகட்டி விடுகிறார்களே ஒரு சிலர்! இதுபோல,பெயரளவிற்கு துறவிகளாக இருப்பதில் அர்த்தமோ, மகிழ்ச்சியோ இருக்காதே!


சரி, அர்ப்பண வாழ்வு துறவிகளுக்கு மட்டும் தானா? திருமண வாழ்வில் அர்ப்பணம் கிடையாதா?


அர்ப்பண வாழ்வு எல்லாருக்கும் பொதுவானது தான். வாழ்க்கைமுறையில் தான் துறவிகளுக்கும் பொதுநிலையினருக்கும் சில வேறுபாடுகள் உண்டு. அர்ப்பணத்தின் ஆழத்திலோ, யேசுவின் மதிப்பீடுகளுக்காக வாழ்வதிலோ எந்த வேறுபாடும் கிடையாது. திருமணம்; செய்தவர்களும் இறைவனுக்குத் தங்களையே அர்ப்பணம் செய்தவர்களாக, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நிறைவான அன்புடன்”என் கடன் அன்புப்பணி செய்து கிடப்பதே!” அவர்களது அர்ப்பண வாழ்வின் வெளிப்பாடு. தங்களது குடும்பங்களைத் திருக்குடும்பங்களாக உருவாக்குவதும் குடும்ப வரையரைகளைக் கடந்து அன்புச் சேவையால் உலகை உய்விக்க முற்படுவதும் உண்மையான அர்ப்பணம்.


அர்ப்பண வாழ்வுக்கும் இறை இரக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அர்ப்பண வாழ்வு இரக்கத்தில் வேரூன்ற வேண்டும். இறை இரக்கத்தை அனுபவித்து, தினமும் நன்றி உணர்வுள்ளவர்களாய் வாழ்ந்தால் அர்ப்பண வாழ்வு எளிதாக, இனிமையானதாகமலரும். அப்போதுதான் வாழ்வில் மகிழ்ச்சி மணம் வீசும்.


ஒரு குன்றின்மீது கட்டப்பட்டிருந்த மடத்தில் இருந்த துறவிகள் ஆரவாரமில்லாத மகிழ்ச்சியோடு இருந்ததை ஊர் மக்கள் உணர்ந்திருந்தார்கள். திருப்பாக்களைப் பாடி இறைவனைப் புகழ்வதில் இருந்த அக மகிழ்ச்சி அங்குள்ள துறவிகளின் இல்லத்தில் அன்புச் சங்கீதமாக இசைத்தது. அவர்களது முகங்கள் எப்போதும் மலர்ந்து இருந்ததினாலே மனஅழுத்தத்தில் இருந்தவர்கள் எல்லாம் இவர்களைப் பார்க்க வந்தார்கள். இவர்கள் ஆற்றுப்படுத்தும் கலையில் பட்டங்கள் ஏதும் பெறா விட்டாலும், இவர்களது கள்ளங்கபடமில்லாத உள்ளமும், கனிவான பேச்சும், பிறர்மீது கொண்டுள்ள ஆழமான அக்கறையும் வந்தவர்களுடைய மனமுதுகைத் தட்டிக் கொடுத்தது! வாழ்க்கைச் சுமைகளை இறக்கி வைத்தது. ஆகவே, கோவிலுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருந்தது. திருப்பலியில் வானவர்களே வந்து பாடியதைப் போன்று மக்கள் பரவசம் அடைந்தார்கள்.


வருடங்கள் உருண்டோடின. துறவிகளின் பாடல்களில் தெய்வீக ரசனை குறைந்து போனது. அவர்களது வார்த்தை வலுவிழந்தது. கோவிலுக்கு வரும் கூட்டமும் துறவு மடத்தில் சேருகின்றவரின் எண்ணிக்கையும் குறைந்தது. இதை ஆழமாக உணர்ந்த துறவிகள் கவலையோடு ஆய்வு செய்தார்கள். காரணம் பிடிபடவில்லை.


இத்தருணத்தில், யூத குரு ஒருவர் நகரத்திற்கு வருகிறார் என்று கேள்விப்பட்டு துறவிகளின் தலைவர் போய்ப் பார்த்து வந்தார். திரும்பி வந்தவுடன் யூத குரு என்ன சொன்னார் என்று மற்றவர்கள் வினவினர். “யூத குரு, நமது துறவு மடத்தில் இருக்கும் ஒருவரிடம் யேசு மறுரூபத்தில் இருப்பதாகச் சொன்னார்” என்று பகிர்ந்து கொண்டார். நகைச்சுவை என்று தொடக்கத்தில் எல்லாரும் சிரித்தாலும், யேசு இங்கு இருக்கலாமோ என்ற எண்ணம் நம்பிக்கையாகத் தோன்றி, பிறரை யேசுவாகப் பார்த்து, மதித்து, அன்புடன் செயல்படத் தொடங்கினர். விரைவில், துறவுமடம் மகிழ்ச்சியின் இருப்பிடமாக மாறியது. வார்த்தைகள் உள்ளங்களில் இருந்து பிறந்தன. செயல்கள் அன்பின் வெளிப்பாடாக வளர்ந்தன. பாடல்கள் உயிரூட்டம் பெற்றன. திரும்பவும் மக்கள் இவர்களைத் தேடி வர ஆரம்பித்தனர்.


இது நாம் ஏற்கனவே கேட்ட கதையாக இருக்கலாம். ஆனால், இக்கதையின் உட்பொருள்தான் அர்ப்பண வாழ்வின் இரகசியம். நம் அருகில் உள்ளவர்கள் குறையுள்ளவர்களாக, திறமைகள் இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்களிலும் யேசு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு வாழ ஆரம்பித்தால், அர்ப்பண வாழ்வு அர்த்தமுள்ளதாக, இனிமையானதாக மலரும். விண்ணுலகமே மண்ணுலகில் வந்து குடிகொள்ளும்! அதுதானே நாம் எதிர்பார்க்கும் இறையாட்சி!

  

 - அருட்தந்தை. எம்மா சே.ச.
இயக்குநர். JESCCO,
Jesuit Center for Counseling,
ஞானஒளிவுபுரம்.

COMMENTS

Share On

More Articles

இருள் வாழ்வு ஒளியாகும்..

அடியேன் 2000-ம் ஆண்டில் இயேசுவின் மீட்புப் பணியில் பங்குபெற்ற இஸ்ராயேல் நாட்டிலுள்ள புனித இடங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். இயேசுவின் வாழ்வில் பங்குபெற்ற பரிசுத்த இடங்கள் என்னையும் பரிசுத்தப்படுத்தியது.

இயேசு சிலுவையில் மரித்த கல்வாரிமலையில் இ…

யோபு ஆகமம் - புதிய ப..

அடியேன் வேதாகமத்தைப் பலமுறை வாசித்திருக்கிறேன். இறைவார்த்தைகளைத் தியானித்து ஜெபித்…

தந்தையே, உமக்கு விரு..

“இந்தத் தவக்காலம் முழுவதும் தண்ணி அடிக்க மாட்டேன்னு என் மனைவிகிட்ட வாக்குக் …

ஒப்பற்ற புனிதரே புனி..

எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு குருவானவர் அசாமிலே இறைப்பணியும், கல்விப் பணியும் செய்…

அருள்பணியாளர் லூயி ல..

அருள்பணியாளர் லூயி லெவேயை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியது இல்லை. நம்மில் பலர் …

New Published Books