உலக பெற்றோர் தினம் ஜூன் - 1
கொடுப்பதற்கு, தன் சொத்தில் மிகப்பெரிய பங்கை எழுதிவைத்துவிட்டு 1896ம் ஆண்டு இறந்தார்.
ஆல்பிரட் என்பவர் 1888-ம் ஆண்டு ஒரு நாள் காலையில் செய்தித்தாளை எடுத்துப் பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போனார். தன் சகோதரர் லுட்விக் என்பவர் இறந்து விட்டார் என்று பதிவு செய்வதற்குப் பதிலாக, ஆல்பிரட் இறந்துவிட்டார் என்று செய்தித் தாள்கள் அறிவித்ததோடு நிறுத்தவில்லை. ”மரணத்தின் வியாபாரியான ஆல்பிரட் இறந்துவிட்டார்” என்று குறிக்கப்பட்டிருந்தது. இந்த ஆல்பிரட்டின் முழுப் பெயரைச் சொன்னால், இவர் யாரென்று எளிதாகப் புரிந்து கொள்வீர்கள். ஆல்பிரட் நோபல் என்பது தான் அவரது பெயர். டைனமைட்டைக் கண்டுபிடித்து,,நிறைய நாடுகளுக்கு விற்று, பெரிய பணக்காரர் ஆனவர். டைனமைட்டினால் நிறையப் பேர் இறந்திருந்தாலும் பணமும் புகழும் அவரைத் தேடி வந்து கொண்டிருந்தன.
செய்தித் தாள்களில் பிரசுரமானதைப் பார்த்து, “என் உண்மையான மரணத்திற்குப் பிறகு மக்களின் மனங்களில் எதை நான் விட்டுச் செல்லப் போகிறேன்?”என்ற கேள்வி அவரது உள்ளத்தைத் துளைக்க ஆரம்பித்தது. தன் உணர்வுகளையும் விழுமியங்களையும் ஆய்வு செய்தார். ”மரணத்தின் வியாபாரி” என்ற பெயரை விட்டுச் செல்லப் பிரியமில்லாதவராய், இயற்பியல், வேதியியல், இலக்கியம், உடலியல் அல்லது மருத்துவ அறிவியல் மற்றும் அமைதிக்கான பரிசுகளை நோபல் பரிசுகளாகக் கொடுப்பதற்கு, தன் சொத்தில் மிகப்பெரிய பங்கை எழுதி வைத்துவிட்டு 1896ம் ஆண்டு இறந்தார்.
ஆல்பிரட் நோபலைப் போன்று பெரிய பணக்காரர்கள் ஆவதோ, நல்ல காரியங்களுக்காக, பின் வரும் சந்ததியினருக்காக, பெரிய சொத்தை விட்டுச் செல்லும் பாக்கியமோ, எல்லா மக்களுக்கும் கிடைக்காது. தானம் பண்ணுவதற்கு வழி இல்லாவிட்டாலும், ”நம் வாழ்வுக்குப் பின்னால் நாம் எதை விட்டுச் செல்லப்போகிறோம்? நாம் இறந்த பிறகு நம்மைப் பற்றி, பிறர் என்ன சொல்வார்கள்? பிறர் நம்மைப் போற்றுமளவுக்கு ஏதாவது செய்யாமல் நாம் இவ்வுலகை விட்டுப் போனால், நம் வாழ்க்கையின் பயன் என்ன?” என்ற கேள்விகள் நமது உள்ளங்களையும் பிழிய வேண்டும்.
கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையத் தேவையில்லை. பணம் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குழந்தைகள் தாம் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் உயிருள்ள சொத்து, நம் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளை நல்ல பக்குவமும் மகிழ்ச்சியும் நிறைந்த குழந்தைகளாக வளர்த்து ஆளாக்கினால், அவர்கள் தாம், நாம் விட்டுச் செல்லும் சொத்து. அவர்களைப் பார்த்து அதிசயத்தில் மகிழ்ந்து போகிறவர்கள் அவர்களது பெற்றோர்களையும் உறுதியாகப் புகழ்வார்கள் அல்லவா? இயேசுவின் பேச்சைக் கேட்டு வியந்த ஒரு பெண்மணி, ”உம்மைச் சுமந்த உதரமும் நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறு பெற்றவை!” (லூக் 11:27) என்று இயேசுவின் தாயைப் புகழ்ந்து உரக்கச் சொன்னது நமக்கு நினைவுக்கு வரும். அருமையான அன்பு நிறைந்த பெற்றோர்களாக நாம் வாழ்ந்தோம் என்று பிறர் நினைத்துப் போற்றுமளவுக்கு வாழ்ந்து காட்ட முடியுமல்லவா?
ஒவ்வொரு ஆண்டும் ஜீன் மாதம் 1-ந் தேதியை பெற்றோர்களின் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் அவை 2012ம் ஆண்டு அறிவித்தது. பெற்றோர்களின் அன்பையும் சேவையையும் தியாகங்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்து, பாராட்டி மகிழ்வதற்கு இது ஓர் அருமையான நாள். வாழ்க்கைக் கடலில் அசைந்தாடும் குடும்பக் கப்பல்களுக்கு, பெற்றோர்கள் தானே நங்கூரம்! குடும்பங்களுக்குத் தூண்களாக இருப்பதால், அவர்கள் தானே சமுதாயத்தின் அடித்தளம்!
குழந்தைகளைப் பெறுவது எளிது. ஆனால் பெற்றோர்களாக இருப்பது எளிதல்ல! என்பது பழமொழி மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்துப் பெற்றோர்களின் அனுபவமும் தான்.எனினும், குழந்தைகளை முழு மனிதர்களாக உருவாக்குவது இறைவனின் படைப்புச் செயலில் பங்கு பெறுவதைப் போன்றது. ஆனால், அதே நேரத்தில், இது சூதாட்டத்தைப் போன்றதும் கூட... இதன் விளைவு அல்லது பயன் நமக்கு பிறகு தான் தெரிய வரும்!
ஒன்பது மாதங்கள் சுமந்து பெற்றெடுத்து, பாசத்துடன் பாலூட்டி, பார்த்துப் பார்த்து உணவளித்து, விதவிதமான உடைகள் அணிவித்து, குழந்தை உறங்கும் போது கூட அருகிருந்து கண்ணயராமல் பாதுகாத்து, தன்னலத்தைத் தூர எறிந்து விட்டு ஆயிரக்கணக்கானத் தியாகங்கள் செய்து, மூட்டை மூட்டையாகப் பணம் செலவழித்துப் படிக்க வைத்து... இறுதியில் மகனோ, மகளோ எப்படி வாழ்கிறார்கள், எதைச் சாதிக்கிறார்கள், மற்றவர்கள் இவர்களை எப்படிப் பார்க்கிறார்கள்... என்பதைப் பொறுத்துத்தான் பெற்றோர்களின் பல வருட முயற்சிகளின் விளைவு நல்லதா கெட்டதா என்று தெரிந்து கொள்ள முடியும். அதனால் தான், பிள்ளை வளர்ப்பு சூதாட்டத்தைப் போன்றது. நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.
தியாக உணர்வில் திpளைத்திருந்தாலும், எததையும் எதிர்பாராத அன்பாக பெற்றோர்களின் அன்பு எப்போதும் இருக்க முடியுமா? நன்றாக வளர்ந்து வசதிகள் வந்தவுடன், குழந்தைகள் பெற்றோர்களை மறந்து கண்டுகொள்ளாமல் போகும் போது, வயதான பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ளவும் அவர்களின் தேவைகளைப் ப10ர்த்தி செய்யவும் முடியாது என்று ஒதுங்கி விடும்போது, பெற்றோர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும்? மன நிறைவுக்குப் பதிலாக விரக்தியல்லவா மனத்தை நிறைக்கும்! நன்றி கெட்டவர்களாக குழந்தைகள் பல்லாண்டுகள் இருக்கும் போது கூட “”இவர்கள் இப்படி இருப்பதற்கு நாம் தான் காரணமோ?” என்று குற்ற உணர்வுடன் அங்கலாயக்கிற பெற்றோர்களும் உண்டு.
பெற்றோர்கள் எப்படி எப்போதும் மகிழ்வுடன் இருப்பது? இது நடக்கிற காரியமா?”என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற மன உறுதியுடன் அன்பை வாழ்வாக செயலாக மாற்றுவதற்கு மனம் இருந்தாலும், மகிழ்ச்சி காணாமல் போவதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. உடல் வியாதிகள், உளவியல் பிரச்சனைகள், நிதிப் பற்றாக்குறை, உறவுப் பிரச்சனைகள், வாழ்வில் அர்த்தமின்மை, இன்னும் என்னென்னவோ பிரச்சனைகள் தலைக்கு மேலே காட்டாறாய் ஓடும் போது, சாதாரண மனிதப் பெற்றோர்களால் மகிழ்வோடு இருப்பது எளிதான காரியம் கிடையாது.
உண்மையான மகிழ்ச்சி நிறைந்த பெற்றோர்களாய் வாழ்வதற்கு, பெற்றோர்கள் தங்களுக்குள்ளே இருக்கும் அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் தொடர்ந்து மனந்திறந்து பாராட்டுவதில் தேர்ச்சி பெற dkmவேண்டும். கருத்துக்களைவிட தங்களுடைய உணர்வுகளை அதிகமாக ஒருவருக்கொருவர் பகிர்ந்து வர வேண்டும். புதுத் தம்பதியராக இருந்தால்தான் அன்பை கூச்சப்படாமல் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள இயலும் என்று நினைக்காமல், என்ன வயதானாலும், வார்த்தைகளில், சேவைகளில், தியாகச் செயல்களில்,, உடல்மொழியில் (body language) அன்பை வெளிப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.
கவலைகளையும் கஷ்டங்களையும் கடந்து, மகிழ்வோடு வாழ்க்கை நடத்த, இறைவனின் அருளும் அவரைப் பற்றிக்கொள்வதற்கு வேண்டிய ஆழ்ந்த விசுவாசமும் வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு குடும்பமும் திருக்குடும்பமாய்த் திகழ முடியும்.
அருட்தந்தை, எம்மா, சே.ச.
இயக்குநர் JESCCO
(Jesuit Center for Counseling)
மதுரை - 16.




Spiritual Category
Religious Category
COMMENTS