இறையேசுவில் பிரியமானவர்களே ,
நாம் இந்த நவம்பர் மாதம் இறை இரக்கத்தின் ஜூபிலி ஆண்டின் இறுதி கட்ட கொண்டாட்டங்களிலும், வழிபாடுகளிலும் நம்மை நாமே தயாரித்துக்கொண்டிருக்கிறோம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2016ஆம் ஆண்டினை இறைஇரக்கத்தின் ஜூபிலி ஆண்டாக அறிவித்தார்.
அந்த இறைவனின் இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் நம் அன்றாட வாழ்வினில் உணர்ந்து மகிழந்திட ‘இரக்கத்தின் முகம்’ என்ற மடலையும் வெளியிட்டுள்ளார். அத்தோடு ஒவ்வொரு ஆலயமும் இறை இரக்கத்தை வெளிப்படுத்துகின்ற, வாயில்களாக அமைந்திட ‘இரக்கத்தின் வாயில்-களையும் திறந்து வைத்தார்.
இந்த இறை இரக்க ஜூபிலி ஆண்டு வெறுமனே கொண்டாட்டமாகவோ, சடங்காகவோ முடிந்துவிடக்கூடாது. இது நமது நம்பிக்கை வாழ்வின் ஓர் தொடர் பயணம்.
"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்."(மத்தேயு 5: 48)
என்று மத்தேயு நற்செய்தியாளர் நிறைவாழ்வினை காண அன்போடு அழைக்கிறார். அதற்கு இணையாக லூக்கா நற்செய்தியில் (6:36) உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல் நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள் எனக் காண்கிறோம். எனவே, ஒரு மனிதனின் நிறைவாழ்வு இரக்க வாழ்வில்தான் இருக்கிறது என்பது புலப்படுகிறது. அந்த இறை இரக்கம் என்பது இறைவனின் பிரசன்னமே. அந்த இறை பிரசன்னத்தை வரலாற்றில் நிறைவாக வெளிப்படுத்தியவர் இறைமகன் இயேசு கிறிஸ்து. “உலகிற்கு தண்டனை தீர்ப்பு அளிக்க அல்ல, தன் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் இயேசுவை உலகிற்கு அனுப்பினார்”என்கிறது.(யோவான் 3: 17)
இறைவனின் இரக்கத்தை மனித உருவில் நமக்கு வெளிப்படுத்தியவர் இயேசு. ஆதலால் தான் “என்னைக் காண்பது தந்தையை காண்பதாகும்” என எடுத்துரைத்தார். (யோவான் 14:9) இந்த இறை இரக்க ஜூபிலி ஆண்டில் இயேசுவின் பிரசன்னத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதே இறை இரக்கத்தின் ஜூபிலி ஆண்டின் நோக்கமாக அமைகின்றது.
இறை இரக்கம், இதயத்திலிருந்து நமது கரங்களுக்கு செல்லட்டும்’ என்று திருத்தந்தை நமக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இறைவனின் இரக்கம் என்பது வெறுமனே இதயத்தில் மட்டும் உணர்ப்படுவதில் இல்லை. மாறாக அதை செயலாக்கம் பெறச்செய்வதில்தான் உள்ளது. இறைவெளிப்பாடு ஒவ்வொரு நாளும் இறைவன் நம்மீது இரக்கம் காட்டுவதில் ஒரு துளி கூட சோர்வடைவதில்லை, தளர்ச்சியுறுவதும் இல்லை. தந்தை இரக்கத்தைப் பெற்று மகிழ்கின்ற நாம், வாழ்க்கையில் சோர்வடைந்திருக்கின்ற, நலிவுற்ற நிலையில் வாழ்கின்ற, தனிமைப்படுத்தபட்ட, ஒடுக்கப்பட்ட, ஏழை மக்கள் மத்தியில்;, நமது இரக்க செயல்பாடுகளால், இறைவன் நம் மத்தியில் இருக்கிறார் என்ற பிரசன்னத்தை, நமது அரவணைப்பினாலும் அன்பினாலும், மன்னிப்பினாலும் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பழிக்குப்பழி, பலாத்காரம், அடக்குமுறை போன்ற வன்முறைச் செய்திகளை நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் காண்கிறோம். இத்தகைய வன்முறையை இரக்கத்தால் மட்டுமே ஒடுக்கமுடியும் என்பதை உணர்ந்த இயேசு பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’.என்கிறார் (மத் 9:13)
வரலாற்றில் இயேசுவின் பிறப்பும் அற்புதங்களும், நற்செய்தியும் பாடுகளும் இறப்பினை வென்று உயிர்த்ததும் இந்த இறை இரக்கத்தின் அடிப்படையிலேதான். அந்த இறை இரக்கத்தின் மனித முகமாக வரலாற்றில் தடம் பதித்தவர் இயேசு ஒருவரே. நாமும் அந்த இயேசுவைப் போன்று இரக்கத்தின் முகங்களாக மாறிடுவோம். “இரக்கத்தைப் பெறவும் ஏற்புடைய வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும் அருள்நிறைந்த அவரது அரியணையை துணிவுடன் அணுகிச் செல்வோமாக.”(எபி 4:16).
இவண்,
மேதகு பேராயர். அந்தோனி பாப்புசாமி
தலைவர் - கத்தோலிக்கத் தமிழக ஆயர் பேரவை

Spiritual Category
Religious Category