இறையேசுவில் எனக்கு பிரியமான சகோதர, சகோதரிகளே, துறவற ஆண்டின் நிறைவினை கொண்டாடி மகிழுகின்ற நாம் நமது மறைமாவட்டத்திற்கு பல்வேறு வகைகளில் தங்களது நிறுவனங்கள் மூலமாகவும் பங்குத் தளங்களில் பணிகள் மூலமாகவும் பணியாற்றி கொண்டிருக்கின்ற ஒவ்வொரு துறவறத்தாருக்கும் எனது முதற்கண் நன்றிகளை மறைமாவட்டத்தின் சார்பாக உரித்தாக்கிக் கொள்கிறேன்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
தமக்கென வாழாமல் பிறருக்கென வாழ்ந்து தங்களது வாழ்வை அர்ப்பணித்த துறவறத்தாரின் அர்ப்பண வாழ்வினை அடித்தளமாகக் கொண்டதுதான் இந்த மதுரை மறைமாநில கத்தோலிக்கு திருச்சபை.
வெறுமனே சமய பணி என்று இராமல் சமூகத்தின் தேவைகளை உணர்ந்து தங்களையே முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திருச்சபையிலும் இறைமசமூகத்திலும் விழிப்புணர்வினையும் மறுமலர்ச்சியையும்; கொணர்ந்தவர்கள் துறவற சகோதர. சகோதரிகளே. இவர்களது பணி வாழ்வால் நமது தலத்திருச்சபை பெருமையும், பெருமகிழ்வும் கொள்கிறது. அவர்களின் அன்பான அர்ப்பண உணர்வுக்கு ஆயர் என்ற முறையிலே நன்றி கூறி மகிழ்கிறேன். உங்களது தோழமையும் உடனிருப்பும் நி;ச்சயமாக இம்மதுரை திருச்சபையைத் தலைத்தோங்கச் செய்யும். இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டிலே இரக்கம் எனும் இறையியல் மதிப்பீடு நிறைவு பெறுவது உங்ளது அர்ப்பணத்தில்தான் உள்ளது என்பதை வெளிப்படுத்திட உங்களுக்கு அன்போடு அழைப்பு விடுக்கிறேன். நமது மறைமாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலமாக இயேசுவின் மதிப்பீடுகளை பல சமூகத்தினருக்கும் நேரிடையாக எடுத்துச் செல்லும் உங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
புனித சவேரியாரை போல நற்செய்தி அறிவிப்பதில் சோர்ந்து போகாமலும் நற்செய்தி விழுமியங்களை துணிச்சலாக வாழ்ந்துகாட்டிய புனித அருளானந்தரைப் போலவும், போர்களும், வன்முறைகளும் சூழ்ந்த சமூகத்தில் இரக்க உணர்வோடு பணியாற்றிய அன்னை தெராசாளைப் போல செயலாற்றிட எனது வாழ்த்துகளும், ஜெபங்களும்.
இவண்,
மேதகு அந்தோனி பாப்புசாமி
பேராயர் மதுரை கத்தோலிக்க உயர்மறைமாவட்டம்.

Spiritual Category
Religious Category